100 ஆண்டு பழமையான வணிக வளாகம் இடிப்பு
கோவை; பாதுகாப்பு காரணங்களுக்காக, கோவையில் இருந்த, 100 ஆண்டு பழமையான வணிக வளாகத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இடித்து அகற்றினர்.கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இவ்வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டது; இக்கட்டடம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மொத்தம், 28 கடைகள் உள்ளன. மிகவும் பாழடைந்து விட்டதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலை காணப்படுகிறது.கடைகளை காலி செய்யச் சொல்லி, பலமுறை அறிவுறுத்தல் வழங்கியும், காலி செய்யாமல் இருந்தனர். மழைக்காலங்களில் பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்படுவதால், அதுபோன்ற இடங்களை கண்டறிந்து அகற்றுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் நடந்த வழக்கிலும், பழைய கட்டடத்தை இடித்து அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது; இருப்பினும், 10 கடைகள் காலி செய்யப்படாமல் இருந்தன.அவற்றில் உள்ள பொருட்களை எடுத்து விட்டு, காலி செய்து கொடுக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது; ஒருவர் மட்டும் இரு கடைகளை காலி செய்ய, ஐகோர்ட் மூலமாக அவகாசம் பெற்றிருக்கிறார். மீதமுள்ள கட்டடங்களை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இரு நாட்களாக இடித்து வருகின்றனர்.தனியாருக்கு சொந்தமான கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏன் இடிக்கிறது; தேவையற்ற செலவினத்தை மாநகராட்சி எதற்காக செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. மழை பெய்யும்போது, இடிந்து விழுந்து அசம்பாவிதத்தை தவிர்க்கவே மாநகராட்சியால் இடிக்கப்படுகிறது; இடிக்கும் பணிக்கு ஏற்படும் செலவினத்தை, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.