உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்துறை அலுவலகத்தின் முன்பு மாட்டை வைத்து ஆர்ப்பாட்டம்

வனத்துறை அலுவலகத்தின் முன்பு மாட்டை வைத்து ஆர்ப்பாட்டம்

தொண்டாமுத்தூர்; நரசீபுரத்தில், சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து, உயிரிழந்த பசு மாட்டுடன், வனத்துறை அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நரசீபுரம், கோசாலை அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், பொன்னுசாமி, 40 என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர், 9 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, இரண்டு பசு மாடுகளை தாக்கியுள்ளது. இதில், 1 பசு மாடு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு மாட்டுக்கு, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பொன்னுசாமி, போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயிகள், 50க்கு மேற்பட்டோர் ஒன்று கூடி, நேற்று மாலை, நரசீபுரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் முன், உயிரிழந்த மாட்டின் சடலத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறித்து, போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர், விவசாயிகளுடன் பேச்சு நடத்தினர். இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தப்படும். இரவு ரோந்து பணியில் கூடுதல் வாகனம் ஈடுபடுத்தப்படும் என, வனத்துறையினர் உறுதி அளித்ததின் பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ