பெற்றோரை இழந்த மாணவர்கள் விபரம் அரசு பள்ளிகள்தோறும் சேகரிப்பு
பொள்ளாச்சி; 'அன்புக் கரங்கள்' திட்டத்தின் கீழ் மாதம், 2 ஆயிரம் ரூபாய் பெறும் வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பெற்றோரை இழந்த மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகள், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மாதம்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பெற்றோரை இழந்த மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக, பள்ளி சார்ந்த விபரங்கள் அனைத்தும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். தற்போது, அன்புக் கரங்கள் திட்டத்திற்காக, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விபரம், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் நேரடியாக அளிக்கப்படுகிறது. மனு அளித்த பின் சில நாட்களில், வீட்டிற்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமிருந்து மனு ஏற்பு கடிதம் வரும். அதன்பின், உதவித்தொகை பெறுவதற்கான மாவட்ட முன்னுரிமை வரிசையில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோரை இழந்த மாணவர்களிடம் இருந்த, தந்தை, தாய் இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமான சான்று, ஜாதி சான்றிதழ், பெற்றோர்களின் வாக்காளர் அட்டை, வாரிசு சான்று, இருப்பிட சான்று அல்லது பிறப்பிட சான்று என, பெற்றோர் குறித்த ஆவணங்கள் பெறப்படுகிறது. மேலும், அவர்களிடம் இருந்து, ஆதார் கார்டு, பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, பிறப்பு சான்று ஆகியவை பெறப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.