தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் அறிவுரை
பெ.நா.பாளையம் : மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொண்டு தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என, தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் பேசினார்.நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பிரஸ் காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி மற்றும் துடியலூர் வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணி திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில், தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் பேசுகையில், 'மாணவர்கள் புத்தக அறிவை வளர்ப்பதோடு, தற்போதைய சூழ்நிலையில் உள்ள தொழில்நுட்ப அறிவையும், நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் எளிதில் தீர்வு காண வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு உதவும்' என்றார். துடியலூர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மணிமாறன் பேசுகையில், மாணவர்கள் சமுதாயத்துடன் இணைந்து இணக்கமான சூழ்நிலையில் பணியாற்றி, ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும். இது போன்ற நாட்டு நல பணி திட்டம் அதற்கு உறுதுணையாக இருக்கும். இதை மாணவர்கள் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.பள்ளி வளாகத்தில் தொடர்ந்து, 7 நாட்கள் நடக்கும் இம்முகாமில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல், இயற்கை மருத்துவம், ஆன்லைன் மோசடியில் இருந்து காத்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்த கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் மோகன், சுரேஷ், பாபு ஆகியோர் செய்து வருகின்றனர்.