கோவையில் வளர்ச்சிப் பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கோவை; கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அவர் பேசுகையில், “வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்,” என்றார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம், முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள், 2ம் கட்டமாக 96 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இரு கட்ட முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்ட மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட பயனாளிகள், வருவாய் துறை சார்பில் இ-பட்டாக்கள், ஆன்லைன் பட்டா வழங்கல், மாநகராட்சி பகுதியில் சாலை, குடிநீர் திட்ட பணிகள், செம்மொழி பூங்கா, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.