மசராய பெருமாள் கோவிலில் பாலாலயம்; 40 ஆண்டுக்கு பிறகு பக்தர்கள் பக்தி பரவசம்
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பக்தர்களின், 40 ஆண்டுகால கோரிக்கைக்கு பின்னர், மசராய பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூர் அருகே புதுப்பாளையம் செல்லும் வழியில் மசராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒருவேளை விளக்கு ஏற்ற கூட ஆளில்லாமல் பாழடைந்து கிடக்கிறது.இதை ஹிந்து சமய அறநிலைத்துறை உடனடியாக புனரமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, பாலாலயம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, நேற்று காலை மத்தம்பாளையம் காரண விநாயகர் கோயிலின் உபகோவிலான மசராய பெருமாள் கோவிலில், செயல் அலுவலர் வெண்ணிலா, நகை சரிபார்ப்பு அலுவலர் விக்னேஷ் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலைய துறையினர், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், ஆனந்தன், கோவில் முக்கிய பிரமுகர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் தலைமையில், மசராய பெருமாள் கோவிலில் உள்ள, மூன்று மூலவர் சிலைகள், இரண்டு நாகர் சிலைகள், இரண்டு கருப்பராயன் சிலைகள், கோவிலுக்கு வெளியே உள்ள நான்கு முனீஸ்வரன் சிலைகள் ஆகியவற்றை, அதற்குரிய பூஜைகள் செய்து அகற்றி, பாலாலயம் செய்தனர்.ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கூறுகையில், ' தற்போது உள்ள அமைப்பு மாதிரியே கோவில் கருங்கல் கட்டடம் கட்டப்படும். தற்போது சிதிலமடைந்துள்ள கோவில், மேல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, இடித்து அகற்றிய பின்பு கட்டுமான பணிகள் துவங்கும்' என்றனர்.முன்னதாக, கோவில் சிலையில் உள்ள சக்தி, கும்பங்களில் நிலை நிறுத்தும் பணி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.