உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு முறை

ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு முறை

எ ந்த உணவை, எப்போது, எப்படி, எவ்வளவு, எங்கே சாப்பிடுவது என்பதில்தான் அடங்கியுள்ளது ஆரோக் கியத்தின் ரகசியம். இது குறித்து உணவியல் நிபுணர் கவிதாவை சந்தித்து பேசினோம். இன்றைய உணவு பழக்கவழக்கத்தில், மக்கள் செய்யும் தவறுகள் என்ன?ஹோட்டல் உணவு அதிகம் விரும்பி உண்கின்றனர். தவிர, பாக்கெட், ஜங் புட், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு எடுத்துக்கொள்வதே தவறு. முடிந்த வரை வீட்டில் எண்ணெய், சர்க்கரை, உப்பு அளவு குறைத்து, சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. புதிது புதிதாக நோய்கள் வரிசை கட்டுவதற்கும், உணவுக்கும் சம்மந்தம் உண்டா?கட்டாயமாக. உணவின் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை காணமுடிகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கல்லீரல் பிரச்னை, இதய நோய்கள் என அனைத்து நோய்களின் அடிப்படையும் உணவில் தான் துவங்குகிறது. குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் பருமன் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். தவறான உணவு பழக்கம், காய்கறி மற்றும் பழங்கள் உணவில் சேர்க்காமை, நேரம் தவறி உண்பது, அதிக ஜங்க்புட் போன்றவற்றால் புற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது. குழந்தைகள் உணவில் கடைபிடிக்க வேண்டியவை என்ன?குழந்தைகள் பிறந்த ஆறு மாதங்கள் தாய்ப்பால்; அதன் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவுடன் துவங்க வேண்டும். இணை உணவு துவங்கும் போது, சர்க்கரை, உப்பு கட்டாயம் தவிர்த்து இயற்கையான அனைத்து உணவையும் அறிமுகப்படுத்தி விட வேண்டும். சுவையாக இருந்தால்தான் குழந்தை உண்ணும் என நினைத்து சர்க்கரை கலப்பது, உப்பு சேர்ப்பது கூடாது. பிடிக்கவில்லை என்றாலும் காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை அழுகிறது, ஏங்குகிறது என பாக்கெட் ஸ்நாக்ஸ், பிஸ்கட், பீட்சா, பர்கர், குளிர்பானங்கள் , சாக்லேட் போன்றவை அடிக்கடி வாங்கித்தருவதால், 30-40 வயதில் வரவேண்டிய நோய்கள் 15-20 வயதுக்குள் வந்து விடும். பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோய், இன்று குழந்தைகள் மத்தியிலும் காண முடிகிறது. பிரிட்ஜில், மாவு வாரக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாமா?மாவு மட்டுமல்ல சமைத்த உணவு பொருட்கள், இறைச்சி ஏதும் நீண்ட நேரம் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. அதிகபட்சம், 24-48 மணி நேரத்தில் பயன்படுத்திவிட வேண்டும். இறைச்சி, மாவு போன்றவற்றை பிரிட்ஜில் இருந்து எடுத்து, சூடுபடுத்தி பயன்படுத்திவிட்டு, மீண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைக்கும் பொருட்களில், நுண்ணுயிரிகளின் தாக்கம் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை மாவை ஆட்டி வைத்து பயன்படுத்துகின்றனர். வேண்டுமெனில், வேறு வழியில்லாத சூழலில் நான்கு, ஐந்து பாத்திரங்களில் பிரித்து வைத்து பயன்படுத்தலாம். ஒரு முறை வெளியில் எடுத்தால், மீண்டும் உள்ளே வைக்கக்கூடாது. விரத முறை டயட் (இன்டர்மிட்டன் பாஸ்ட்டிங்) என்பது என்ன? யாரெல்லாம் பின்பற்றலாம்?இன்டர்மிட்டன்ட் பாஸ்ட்டிங் என்பது, 16 மணி நேரம் விரதம், 8 மணி நேரத்தில் மூன்று நேர உணவு எடுத்துக்கொள்வது. இம்முறை, அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக, சர்க்கரை, பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முயற்சிக்க கூடாது. உடலில் எவ்வித பிரச்னையும் இல்லை; உடல் எடை குறைக்க விரும்புவோர் கட்டாயம், டாக்டர் ஆலோசனை பெற்று பின்பற்றலாம். டாக்டர் கவிதா87540 gmail.com

பெற்றோருக்கு அட்வைஸ்

சாக்லேட், பாக்கெட் ஸ்நாக்ஸ் உண்பதால், குழந்தை 'ஹைபர் ஆக்டிவ்' ஆக மாறுகிறது. அலர்ஜி, வயிற்று கோளாறு அடிக்கடி ஏற்படுகிறது. பதின் பருவத்தில் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, பி.சி.ஓ.டி., பிரச்னை ஏற்படுகின்றன. குழந்தைகள் விரும்பாவிடில் காய்கறி, கீரைகளை அரைத்து சப்பாத்தி போன்றவற்றில் கலந்து கொடுத்து விடலாம். போன் பார்த்தபடி உணவு உண்ண அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால், சரியாக உணவு மெல்லுவதில்லை. அளவும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் அதிகமாகிவிடுகிறது. இதனால், அனைத்து நோய்களும் வரிசைக்கட்ட ஆரம்பித்து விடும்.

முதியோர் உணவு முறை

முதியோருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். விதம்விதமாக உணவு செய்து சாப்பிட முடியவில்லை என்றாலும் அரிசியுடன், பருப்பு, காய்கறி, ஆயில் குறைவாக சேர்த்து உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, கீரைகள், முழு தானியங்கள், சிறுதானியங்கள், கொட்டை, விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. காய்கறி, கீரை, பழங்களை 300-400 கிராம் எடுத்துக்கொண்டாலே, நார்ச்சத்து கிடைத்துவிடும்.

எடை குறைப்புக்கு வழி

எடை குறைக்க முதலில், மூன்று நேரமும் சரிவிகித உணவு, உடற்பயிற்சி, இரவு சரியான துாக்கம், இரவு உணவு 7-8 மணிக்குள் எடுத்துக்கொள்ளுதல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு உண்ணுதல், துரித உணவு தவிர்த்தல், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல், தண்ணீர் சரியான அளவு எடுத்தல் போன்றவற்றை, வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டால் படிப்படியாக எடையை குறைக்கலாம். எடை குறைப்பு உடனடியாக நடக்க வேண்டும் என்றால், அது சரியான வழிமுறை அல்ல.

கூடாது 'மிட் நைட் பிரியாணி'

'மிட் நைட் பிரியாணி' என்ற தவறான கலாசாரம், தற்போது இளைஞர்களிடம் பரவலாக காணப்படுகிறது. இரவு உணவை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும். இரவு பணிக்கு செல்பவர்கள் பலர் உணவை எடுத்துச்சென்று 12:00 மணிக்கு மேல் சாப்பிடுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். இரவு என்பது நம் அனைத்து உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கும் நேரம். அச்சமயத்தில் உண்பதால், துாக்கம் கெடும். செரிமான பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு என பல பிரச்னைகள் ஏற்படும். இவை தொடர்ந்தால், உடல் பருமன், நோய் பாதிப்புகள் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை