உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் - பட்டம் சார்பில் வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல கேசவ் பள்ளி மாணவர்கள் ஆர்வம்

தினமலர் - பட்டம் சார்பில் வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி பரிசை வெல்ல கேசவ் பள்ளி மாணவர்கள் ஆர்வம்

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' மெகா வினாடி - வினா போட்டியில், பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறன்களையும் ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்தும் வகையில், 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகள், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 310 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எச்' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் ரிஜித், பரத்குமார் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் பிரகாஷ், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். திறமையை வளர்க்கும் பள்ளி முதல்வர் பிரகாஷ் கூறியதாவது: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ், இலக்கியம் முதல் அறிவியல் வரை அனைத்து செய்திகளும், மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், திறமைகளை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. போட்டி தேர்வுகளில் 'பட்டம்' இதழில் வரும் வினாக்கள் இடம்பெறுகின்றன. மாணவர்களது தனித்திறமையை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் படிக்க கூடிய அறிவுசார்ந்த இதழாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

விரும்பி படிக்கிறோம்!

ரிஜித்: 'பட்டம்' இதழ் மிகவும் பயனாக இருக்கிறது. தினமும் ஆர்வமுடன் படிக்கிறேன். கணிதம், அறிவியல், பொதுஅறிவு என அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ள உதவுகிறது. வினாடி -- வினா போட்டிகளில் பங்கேற்க உதவியாக இந்த இதழ் உள்ளது. இந்த போட்டியில் வென்றது போல, இறுதி போட்டியிலும் வெல்ல முயற்சிகளை மேற்கொள்வேன். பரத்குமார்: 'தினமலர்' பட்டம் இதழ், பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக உள்ளது. இதில், வரும் தகவல்கள் ஒவ்வொன்றும் ஆர்வமாக படிக்க துாண்டுகிறது. எளிதாகவும், புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதால், 'பட்டம்' இதழை அனைவரும் விரும்பி படிக்கிறோம்.வினாடி - வினா இறுதி போட்டியில் வெல்வதை இலக்காக கொண்டு பயற்சி மேற்கொள்வேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !