பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்து வரும் பருவமழையால், சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுப்பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் நிரம்பி வழிகின்றன; அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்கிறது. சோலையாறு அணையில் 160.93 அடி நீர்மட்டம் உள்ளது. விநாடிக்கு 1,941 கன அடி நீர் வரத்தாகவும், 2,171 கன அடி நீர் வெளியேற்றமாகவும், பரம்பிக்குளம் அணைக்கு விநாடிக்கு 1,824 கன அடி நீர் வரத்தாகவும், 1,736 கன அடி நீர் வெளியேற்றமாகவும் உள்ளது. சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படுகிறது. ஆழியாறு அணைக்கு விநாடிக்கு 653 கன அடி நீர் வரத்தாகவும், 186 கன அடி நீர் வெளியேற்றமாகவும், அமராவதி அணைக்கு விநாடிக்கு 568 கன அடி நீர் வரத்தாகவும், 210 கன அடி நீர் வெளியேற்றமாகவும் உள்ளது. நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழைய ளவு நிலவரம் (மி.மீ.,ல்): சோலையாறு- 12, பரம்பிக்குளம்- 12, மேல்நீராறு- 29, கீழ்நீராறு- 9, தூணக்கடவு- 21, பெருவாரிப்பள்ளம்- 26, வால்பாறை- 10. பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'காண்டூர் கால்வாயில் சர்க்கார்பதி நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திருமூர்த்தி அணை வரையிலும் மூன்று இடங்களில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. ஓரிரு நாட்களில் காண்டூர் கால்வாய் பணிகளை நிறைவு செய்து, சர்க்கார்பதியில் இருந்து திருமூர்த்திக்கு நீர் திறக்கப்படும். காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்தால், பரம்பிக்குளத்தில் உபரி நீர் வெளியேற்றுவதை, பாசனத்துக்கு திருப்ப முடியும்' என்றனர்.