வரும் 29ல் கோவையில் நடக்கிறது தினமலர் பசுமை சைக்கிளத்தான்!
கோவை; உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மாநகர போலீஸ், நேரு கல்விக்குழுமங்கள் இணைந்து பசுமை சைக்கிளத்தான் நிகழ்ச்சி, 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகின்றன.நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசுக்களை நீக்கி, பசுமையான சூழலை ஏற்படுத்தவும், அதை எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்லவும், அதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவே, விழிப்புணர்வு பசுமை சைக்கிளத்தான் பயணம் நடத்தப்படுகிறது.வனம், வன உயிரினம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் நிலைகள் மீட்பு ஆகியவற்றில், 'தினமலர்' நாளிதழ் பங்களிப்பு எப்போதும் இருக்கும். அந்த பயணத்தில், இது மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறோம்.கோவை நகரம் எப்போதும் பசுமையாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இருக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி, வரும் ஞாயிறன்று, (29ல்) நடத்தப்படுகிறது. கோவை பாரதியார் ரோடு மகளிர் பாலிடெக்னிக் முன் புறப்பட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ள டாக்டர் பாலசுந்தரம் ரோடு வழியாக ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் வந்தடையும். அதில், 15 வயது நிறைவடைந்த இரு பாலரும் பங்கேற்கலாம்.அன்றைய தினம் காலை, 7:15க்கு துவங்கி, 9:15 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைகிறது. மாணவர்கள், சைக்கிள் கிளப்கள், சூழல் ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் டீ ஷர்ட் வழங்கப்படும். இந்த பசுமையான மாசில்லா பயணத்தில் பங்கேற்க, 90926 05622 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு பெயர், முகவரி, தொடர்பு எண்ணை அனுப்பி, பதிவு செய்து கொள்ளலாம்.