பின் இரவு வரை ஆய்வு கூட்டம் தவிர்க்க ஊரக வளர்ச்சி துறை இயக்ககம் அறிவுறுத்தல்
சூலுார்; ''அலுவலகங்களில் பின் இரவு வரை ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என, ஊரக வளர்ச்சி துறை இயக்ககம், கலெக்டர்களுக்கு அறிவுறுத்திஉள்ளது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்கள், கலெக்டர் அலுவலகங்களில், தொடர்ச்சியாகவும், பின் இரவு வரை நடத்தப்படுவதாக, ஊராட்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர், ஊரக வளர்ச்சி இயக்ககத்துக்கு புகார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கை விபரம் : ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை வாயிலாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களின் ஆய்வு கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதை தவிர்த்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு குறிப்பிட்ட நாளில், திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தேவையான அலுவலர்களை கொண்டு ஆய்வு கூட்டம் நடத்திடலாம். கூட்டத்தை பின் இரவு வரை நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஊராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட ஊராட்சி செயலர்கள் தனித்தனியாக ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்த்து, ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் நடத்திட வேண்டும். உதவி திட்ட அலுவலர்கள் தனியாக ஆய்வு கூட்டங்களை நடத்துவதால், களப்பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் உள்ளன. அதனால், உதவி திட்ட அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செல்லும் போது, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கள அலுவலர்கள் அடிக்கடி மாவட்ட தலைமையிடத்துக்கு வருவதை தவிர்த்து, உயர்நிலை அலுவலர்கள் கள ஆய்வுக்கு சென்று பணிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.