உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரிடர் மீட்பு படையினர் மேட்டுப்பாளையம் வருகை

பேரிடர் மீட்பு படையினர் மேட்டுப்பாளையம் வருகை

மேட்டுப்பாளையம்; கோவை, நீலகிரி மாவட்டங்களில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், 23 பேர் மேட்டுப்பாளையம் வந்தனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை அடுத்து, வானிலை ஆய்வு மையம் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை அடுத்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி ஆகியவை இணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன.இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த, 23 பேர் கோவை, நீலகிரி மாவட்ட எல்லையான, மேட்டுப்பாளையத்திற்கு வந்தனர். இவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லும் மக்களையும், கால்நடைகளையும் மீட்கக்கூடிய உபகரணங்களை எடுத்து வந்துள்ளனர். சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தால், உடனடியாக அந்த மரங்களை வெட்டி அகற்ற, அதற்கு தேவையான உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் நகராட்சி வள்ளுவர் நகரவை பள்ளியில் தங்கி உள்ளனர். காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து, இவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று மேட்டுப்பாளையம் நகராட்சியில், பேரிடர் மேலாண்மை பணிக்கு என, ஆட்கள் தயார் நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் உதவி மையம் அமைத்து இதற்காக, 04254 222151 என்ற சிறப்பு தொலைபேசி வைக்கப்பட்டு உள்ளது.நிவாரண உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையில், இரவு பகலாக கண்காணிக்க, பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மழையினால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டால், உடனடியாக மீட்பு பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வருவதால், பொதுமக்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.மழை நின்றவுடன் வீடுகளில் முன்பு தேங்கியுள்ள மழை நீரை, அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சாக்கடைகளிலும், இந்த தண்ணீரை நீரோடைகளிலும் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து, அதை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி