உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிராம வாடிக்கையாளர்கள் அதிருப்தி நடைமுறை மாற்றம்!வங்கி கிளைகளுக்கு படையெடுப்பு

 கிராம வாடிக்கையாளர்கள் அதிருப்தி நடைமுறை மாற்றம்!வங்கி கிளைகளுக்கு படையெடுப்பு

அன்னுார்;வங்கி நடைமுறையில் அறிவிக்கப்பட்ட மாற்றத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அன்னுார் வட்டாரத்தில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், ஊராட்சிகளில், மைக்ரோ கிளை வாயிலாக, வங்கி வணிகத் தொடர்பாளர் நியமித்து, வங்கி சேவையை, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.சேமிப்பு கணக்கில், பணம் செலுத்துதல், பணம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றனர். சேவைகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.வங்கி வணிக தொடர்பாளர்கள் கூறியதாவது:இதுவரை, 'ஜீரோ பேலன்ஸ்' சேமிப்புக் கணக்குகளில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கவில்லை. கடந்த ஜூலை 1 முதல், ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு, 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.பிற வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள், ஐந்து முறை இலவசமாக ஸ்டேட்மென்ட் பெறலாம். அதன் பிறகு ஒவ்வொரு ஸ்டேட்மென்டுக்கும் ஆறு ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.ஜீரோ பேலன்ஸ் அல்லாத சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஐந்து முறை மட்டுமே சேவை கட்டணம் இல்லாமல் பணம் செலுத்தலாம்.ஐந்து முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணத்தை மாற்ற ஜீரோ பேலன்ஸ் இல்லாத வங்கி வாடிக்கையாளர்களுக்கு, ஐந்து முறைக்கு மேல் 20 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

வங்கியில் கட்டணமில்லா சேவை

கிராமப்புற வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'கிராமத்து மக்கள் அதிக தொலைவில் உள்ள வங்கிக்கு சென்று சிரமப்படக் கூடாது என்பதற்காக, மைக்ரோ கிளைகள் அமைக்கப்பட்டு, வணிக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.தற்போது வணிகப் பிரதிநிதியிடம் செய்யும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதால், கடந்த இரண்டு மாதமாக பலரும் கிராமத்தில் இருந்து வங்கிக்கு நேரடியாக சென்று, பணம் எடுத்தல், செலுத்துதல், பாஸ்புக் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று வருகின்றனர். வங்கி கிளையில் எத்தனை முறை பணம் செலுத்தினாலும், எடுத்தாலும், ஸ்டேட்மென்ட் பெற்றாலும், பாஸ்புக் பதிவு செய்தாலும் கட்டணம் வசூலிப்பதில்லை. வங்கி கிளையில் தரப்படும் கட்டணமில்லா சேவைகளை கிராமங்களுக்கு வரும் வணிக தொடர்பாளரிடம் பெறும்போதும் செயல்படுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ