உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணிகள் நடக்காவிட்டால் கவுன்சிலை கலைத்து விடுங்க! கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்களே ஆவேசம்

பணிகள் நடக்காவிட்டால் கவுன்சிலை கலைத்து விடுங்க! கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்களே ஆவேசம்

வால்பாறை ;வால்பாறை நகராட்சி வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில்லை; இப்படியே இருக்குமானால் நகராட்சி கவுன்சிலை கலைத்துவிடுங்கள், என, மன்றக்கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலரே ஆவேசமாக பேசினர்.வால்பாறை நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் ராகுராமன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், ஏற்கனவே இருந்த தெருவிளக்குகள் எரியவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளும் எரிவதில்லை.சேடல்டேம் பகுதியில் குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் முறையாக செய்யாததால், அப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க முடியவில்லை. சில இடங்களில் பணி நிறைவடையும் முன்னதாகவே ஒப்பந்ததாரர்களுக்கு எந்த அடிப்படையில் பில் வழங்கியுள்ளீர்கள்.நகராட்சியில் டெண்டர் விட்டு நடக்கும் பணிகளில், தொடர்ந்து முறைகேடு நடக்கிறது. அதிகாரிகளிடம் பல முறை கூறியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். வால்பாறை நகரில் மட்டுமே வளர்ச்சிப்பணியில் அக்கறை காட்டும் நகராட்சி அதிகாரிகள், எஸ்டேட் பகுதியிலும் வளர்ச்சிபணிகள் மேற்கொள்ள வேண்டும். மயானக்கூரை கூட கட்டப்படவில்லை.இவ்வாறு, தி.மு.க., கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டி பேசினர்.ரவிசந்திரன், மகுடீஸ்வரன், அன்பரசன், இந்துமதி (தி.மு.க.,) பேசியதாவது:வால்பாறை நகராட்சியில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடப்பதில்லை. மன்றக்கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சிப்பணிகளுக்கு ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தடை விதிக்கின்றனர்.அப்படியானால் நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் தேவையில்லையே. தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டே முக்கால் வருஷமாச்சு, வார்டுல ஒரு வேலை கூட நடக்கல. வெளியே சொன்னா கேவலமாக இருக்கு. இப்படியே போனால், சட்டசபை தேர்தலில் மக்களை எப்படி சந்திக்க முடியும்.எனவே, வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறாத நிலையில் நகராட்சி கவுன்சிலை கலைத்து விட்டு, அனைவரும் ராஜினாமா செய்து விட வேண்டியது தான், என ஆவேசமாக பேசினர்.தலைவர் பேசுகையில், ''நகராட்சியை பொறுத்த வரை, வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடக்கிறது. சில பணிகள் மட்டும் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன. பணிகளை வேகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக யாரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தெருவிளக்கு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.வளர்ச்சி பணியில் சுணக்கம் காட்டி வரும் நகராட்சியை கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர்களே ஆவேசமாக பேசியதால், கவுன்சிலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தில், நகராட்சி அலுவலகத்தின் முன்பாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்கூரைக்கு கூடுதல் நிதிஒதுக்க கொண்டுவரப்பட்ட தீர்மானம், கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.

தலைகாட்ட முடியல!

வால்பாறை நகராட்சி, 20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மாரியம்மாள் பேசுகையில், ''எனது வார்டில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை. மயானக்கூரை அமைக்கும் பணி கூட பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கவுன்சிலர்களை பார்த்தால் அதிகாரிகளுக்கு எப்படி தெரிகிறது என தெரியவில்லை. வார்டில் பணி நடக்காததால் மக்களிடம் பதில் சொல்ல முடியலை. எத்தனை முறை பொய் சொல்வது.பொய் சொல்லியே ஓய்ந்து போயிட்டோம். வார்டுக்குள்ள தலை காட்ட முடியலை. எனது வார்டில் செய்த வேலையை பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கவுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

PARTHASARATHI J S
டிச 25, 2024 09:40

திமுக அரசு நிர்வாகம் சுத்தமா சரியில்லை. அமைச்சர் தெரு மட்டும் நல்லாயிருக்கு. மற்ற திமுக காரர்களின் இடங்கள் படுகேவலமாக உள்ளதாக திமுககாரர்களே பொறுமராங்க. பத்து லட்சம் வளர்ச்சிப் பணியிலே நாலு லட்சம் அமைச்சர்கள் லஞ்சம் கேட்டால் எப்புடி ? ஒப்பந்தக்காரர்கள் அண்டை மாநிலத்தில் டெண்டர் எடுப்பதாக நம்பத்தகுந்த செய்தி. என்னத்தை சொல்ல? கடவுளுக்கு பயம், மனச்சாட்சி எதுவுமே இல்லை. ஆங்காங்கே திமுககாரர்கள் தங்கட்குள்ளே குஸ்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை