உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷனில் ஓராண்டுக்குப் பின் மண்ணெண்ணெய் விநியோகம்

ரேஷனில் ஓராண்டுக்குப் பின் மண்ணெண்ணெய் விநியோகம்

அன்னுார்; அன்னுார் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் ஓராண்டுக்குப் பிறகு நேற்று மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அன்னுார் தாலுகாவில், முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக 87 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 60,000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், மண்ணெண்ணெய் கடந்த ஓராண்டாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து ரேஷன் கடைகளில் பலமுறை கேட்டு சலித்த பொதுமக்கள் பின்னர் விட்டு விட்டனர். இந்நிலையில் திடீரென நேற்று அன்னுார் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு லிட்டர் 15 ரூபாய் பத்து பைசா வீதம், சிலருக்கு ஒரு லிட்டரும், சிலருக்கு இரண்டு லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதை பார்த்து ரேஷன் கார்டுதாரர்கள் அதிர்ச்சியுடன் மகிழ்ச்சி அடைந்தனர். வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கு விற் பனையாகிறது. வெறும் 15 ரூபாய்க்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து கிராம ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்,' சட்ட சபை தேர்தல் இன்னும் ஒன்பது மாதங்களில் வர உள்ளதால் ஓராண்டுக்கு பிறகு தற்போது மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர். இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது கடந்த மாதமே சில ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. தற்போது தொடர்ந்து இரண்டாவது மாதமாக வழங்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி