மயோனெய்ஸ் பயன்படுத்தினால் சீல் ஓட்டல்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
கோவை, ; உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சமைக்காத முட்டையால் தயாரிக்கப்படும், 'மயோனெய்ஸ்' பயன்படுத்தினால் ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கலெக்டர் அறிக்கை:சமைக்காத முட்டையை கொண்டு தயாரிக்கும், 'மயோனெய்ஸ்' உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ தவறு. மயோனெய்ஸ் என்பது முட்டையின் வெள்ளை கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த, ஒரு உணவுப் பொருள். சால்மொனெல்லா என்னும் பாக்டீரியா, மாசுபடிந்த ஓட்டினை கொண்ட, சமைக்கப்படாத முட்டையால் மயோனெய்ஸ் தயாரிப்பதால், கிருமித்தொற்று உண்டாகும். இக்கிருமிகளால், உடல்நலத்துக்கு பல வகைகளில் தீங்கு ஏற்படும். சால்மொனெல்லா தொற்றின் அறிகுறிகளில் நீர்க்குடல்பேதி, வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்படும்.அதேபோல், ஈ.கோலை கிருமி, குடல் பாதிப்புகளுடன் மட்டுமல்லாது, உடலுக்குள் சென்றால் சிறுநீர்பாதை மற்றும் பிற உடல் உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். ஷவர்மா, தந்தூரி உள்ளிட்ட அசைவு உணவுகளை, மயோனெய்ஸ் கலந்து பரிமாறப்படும் நிலை கோவையில் அதிகரித்துள்ளது.இது குறித்து ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறோம், ஆய்வில் சிக்கும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கவும், சீல் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.