உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டாசாய் களைகட்டியது தீபாவளி ஷாப்பிங்

பட்டாசாய் களைகட்டியது தீபாவளி ஷாப்பிங்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், கோவையில் 'ஷாப்பிங்' களைகட்டத் துவங்கிஉள்ளது.வார இறுதி மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த இரு நாட்களாக, தீபாவளிப் பண்டிகைக்கான 'பர்ச்சேஸ்' கோவையில் களைகட்டியிருந்தது. ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, ராஜ வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.பண்டிகையை முன்னிட்டு, ஜவுளிக் கடைகளில் புத்தம் புதிய வரவுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. புடவை, சல்வார், குர்தீஸ், பலாசோ, அனார்கலி, லாங்க் டாப், வெஸ்டர்ன் ஆடைகள், பட்டுப்பாவாடைகள் என, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளை வாங்க அதிகம் ஆர்வம் காட்டினர்.ஆண்கள் பிரிவில் வழக்கம்போல் டி-ஷர்ட் ஜீன்ஸ் விற்பனை அதிகமாக இருந்தது. உயர்தர லினன், பிராண்டடு ஆடைகளுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது. கடைகளில் கூப்பன்கள், தள்ளுபடி, குறிப்பிட்ட தொகைக்கு வாங்கினால் பரிசுகள் என, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது மகளிர் கூட்டத்தை ஈர்ப்பதாக இருந்தது. வைசியாள் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதியில் நகைகள் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டினர்.எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுகளைப் பொறுத்தவரை, ஆண்டிராய்டு 'டிவி'கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். மொபைல், ஸ்மார்ட் வாட்ச், புதிய கேட்ஜெட்கள் வாங்குவதில் இளசுகள் ஆர்வம் காட்டினர். வழக்கமான இயர்போனைக் காட்டிலும், வயர்லெஸ் நெக்பேண்ட் மற்றும் 'இயர்பாட்'கள் விற்பனை டிரெண்டாக இருந்தது.தீபாவளி பலகாரங்கள் வாங்க ஸ்வீட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பண்டிகையை முன்னிட்டு, எண்ணெய், நெய், சர்க்கரை உள்ளிட்ட பலகாரம் செய்வதற்கான பொருட்களும், மளிகைப் பொருட்களையும் வாங்குவதற்கு, பட்டியலோடு ஆண்களும், பெண்களும் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது.வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆபரை அறிவித்திருந்தன. இதனால், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் விற்பனையகங்களிலும் இல்லத்தரசிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குளிர்காலம் என்பதால், வாட்டர் ஹீட்டர்களிலும் புது வரவுகள், மக்களின் கவனத்தை ஈர்த்தன.மற்றெந்த பண்டிகைகளை விடவும், தீபாவளிக்கு சிறப்பான ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பர்னிச்சர் கடைகளிலும் விற்பனை களைகட்டியிருந்தது. புதிய வார்ட்ரோப்கள், ஷோபா, கட்டில், டைனிங் டேபிள், 'டிவி' யூனிட்டுகளை, தங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு மக்கள் தேர்ந்தெடுத்து வாங்கினர்.தீபாவளிக்கு எளிய தவணை, வட்டியில்லா தவணை திட்டங்களை பல்வேறு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனால், வாகன விற்பனை நிலையங்களிலும், தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆபர்கள் வரவேற்பைப் பெற்றன.சமீபத்தில் இரு பெரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், மெகா ஆபர் விற்பனையை அறிவித்திருந்த நிலையிலும், நேரடியாக கடைகளில் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.ஜவுளி, தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை, வாகனங்கள், பர்னிச்சர்கள், வெளியூர் பயணங்களுக்கான 'பேக்'குகள், மழைக்கால ஆடைகள் என, அனைத்துப் பிரிவுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் வழங்கத் துவங்கியுள்ளன என்பதால், வரும் நாட்களில் ஷாப்பிங் பட்டாசைக் கிளப்பும் என்பதால், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கண்காணிப்பில் போலீசார்

தீபாவளி கொண்டாட்டம் பட்டாசாக களை கட்டி இருந்ததால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள் வாயிலாக, போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ