தேர்தலில் தி.மு.க., எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாது! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்
பொள்ளாச்சி : ''தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; தி.மு.க., எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாது,'' என எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி ராஜாமில்ரோட்டில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி முன்னிலை வகித்தார்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:அனைவரும் எதிர்பார்த்த கூட்டணியை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அமைத்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன. தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.வரும், 2026 தேர்தலில் அ.தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். தி.மு.க., எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாது. கடந்த, 2011ம் ஆண்டு தேர்தல் போல வரும் தேர்தல் இருக்கும்.குடும்ப நலனுக்காக ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின், இனி மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க., ஆட்சியில் கடன் தொகை அதிகரித்து வருவதே சாதனையாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவ கல்லுாரிகள், அரசு கலை கல்லுாரிகள் என பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.விவசாயிகளுக்கு பயன் உள்ள குடிமராமத்து திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் போன்றவை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்காச்சோளம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், நோய் தாக்குதல் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் தென்னை விவசாயத்தை பாழ்படுத்தும் நோய்கள் தாக்குதல் அதிகரித்தும், மருந்து கூட கண்டறியவில்லை. தேங்காய் விளைச்சல், 20 சதவீதத்துக்கு கீழ் சென்றுள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசியும் நடவடிக்கை இல்லை.வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு போன்றவையே இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் வரி விதிப்பு அதிகமாக உள்ளது. அ.தி.மு.க., வெற்றி பெற பூத் கமிட்டியில் உள்ள நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகர பொருளாளர் கனகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.