| ADDED : ஜன 05, 2024 01:42 AM
பொள்ளாச்சி;'புதிய வகை கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை; பாதிப்பு இருக்காது என நம்புகிறேன்,'' என, ஹைதராபாத் இந்தியன் இம்யூனோலோஜிக்கல்ஸ் நிறுவன தடுப்பூசி மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமார் கூறினார்.'ரோட்டரி கிளப் ஆப் பொள்ளாச்சி' சார்பில், தடுப்பூசிகள் நிறுவன மேலாண்மை இயக்குனருக்கு விருது வழங்கும் விழா, ரோட்டரி சங்கத்தில் நடந்தது. அதில், பங்கேற்ற ஹைதராபாத் இந்தியன் இம்யூனோலோஜிக்கல்ஸ் நிறுவன தடுப்பூசி மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா காலகட்டத்தில் ஹைதராபாத்தில் செயல்படும், இம்யூனோலாஜிக்கல்ஸ் நோய் தடுப்பு நிறுவனம், மத்திய அரசின் அனுமதி பெற்று, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, 20 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ் தயாரித்தோம். மத்திய அரசு, 65 கோடி ரூபாய் கொடுத்தது.பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி, உலகிலேயே அதிகளவில் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. குறைந்த விலையில், இந்தியாவில், 60 சதவீதம் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு மற்ற நாடுகளில் வரவேற்பு உள்ளது.மேலும், டெங்கு, சிக்கன் குனியா, ஜிக்கா மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனாவால் எந்த அச்சமும் வேண்டாம். பாதிப்பும் இருக்காது என நம்புகிறேன். வருங்காலத்தில் எந்த வகையான வைரஸ் தாக்கினாலும், இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முடியும். மேலும், இந்த காலகட்டத்தில் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். வனங்கள் பாதிப்பால், வனவிலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்படும்.எனவே, வனங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை எரிவாயு பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.