உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா?

கோவை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியுமா?

கோவை : கோவை மாவட்டத்தில், 40 வயதுக்கு உட்பட்டோர் வரிசையில், 11 லட்சத்து, 23 ஆயிரத்து, 216 இளம் வாக்காளர்கள் உள்ளனர்.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 31 லட்சத்து, 49 ஆயிரத்து, 239 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். 23 ஆயிரத்து, 175 ஆண் வாக்காளர்கள், 23 ஆயிரத்து, 867 பெண் வாக்காளர்கள், 45 மூன்றாம் பாலினத்தவர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், 1,017 இடங்களில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போதுள்ள பட்டியல் அடிப்படையில், 1,019 இடங்களில், 3,117 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 40 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக அமையும்.வயது வாரியாக, வாக்காளர்கள் விபரம் பட்டியல் இடப்பட்டுள்ளன. 18-19, 20-29, 30-39 என, 120 வயது வரையுள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. 18-19 வயது வாக்காளர்கள் முதல் முறை ஓட்டளிப்பவர்கள்; இவ்வகையில், தற்போது வரை, 29 ஆயிரத்து, 615 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20-29 வயது பிரிவில், நான்கு லட்சத்து, 61 ஆயிரத்து, 419 வாக்காளர்கள், 30-39 வயது பிரிவில், ஆறு லட்சத்து, 32 ஆயிரத்து, 182 வாக்காளர்கள் என, மொத்தம், 11 லட்சத்து, 23 ஆயிரத்து, 216 வாக்காளர்கள் இருக்கின்றனர்.நடப்பு கல்வியாண்டு கல்லுாரிகளில் சேர்ந்த மாணவ - மாணவியரை பட்டியலில் இணைத்தால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால், 17 வயதானவர்களிடம் விண்ணப்பம் பெற, தேர்தல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவர்களது பெயர்கள் பட்டியலில் இணையும்போது, தேர்தல் சமயத்தில், இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

11,966 வாக்காளர்கள் நீக்கம்

இறப்பு காரணமாக, 361 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முகவரி மாற்றத்துக்காக, 11 ஆயிரத்து, 262 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. 343 வாக்காளர்களது பெயர்கள் பல்வேறு இடங்களில் இருந்ததால், மற்ற இடங்களில் நீக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் மொத்தம், 11 ஆயிரத்து, 966 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ