உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைனில் உரம் வாங்காதீங்க! வேளாண்துறை அறிவுறுத்தல்

ஆன்லைனில் உரம் வாங்காதீங்க! வேளாண்துறை அறிவுறுத்தல்

கிணத்துக்கடவு: 'ஆன்லைன்' வாயிலாகவும், விளை நிலங்களுக்கு நேரடியாக செல்லும் முகவர் வாயிலாகவும் விற்பனை செய்யப்படும், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை வாங்க வேண்டாம், என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. 'ஆன்லைன்' வாயிலாகவும் அல்லது விளை நிலங்களுக்கு நேரடியாக வரும் முகவர்கள் வாயிலாகவும் உரங்களை வாங்கி பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன், மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, விவசாயிகள் வேளாண் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்கள் வாயிலாக ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும், உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள் தரத்தினை உறுதிபடுத்தி அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதையும் உறுதிபடுத்தி வருகின்றனர். எனவே, நகர்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள், உரம் சம்பந்தப்பட்ட இணையத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை வாங்கி பயன்படுத்த வேண்டும். வேளாண் துறை வாயிலாக வழங்கப்படும் பயிற்சி மற்றும் கூட்டங்களில், இணையவழி வாயிலாக ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை பரிவர்த்தனை செய்வதற்கான வழிவகை இல்லை என்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படுகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்களின் அறிவுரைப்படி, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்துமாறு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்துகிறது. இத்தகவலை, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை