பலாப்பழங்களை விற்க வேண்டாம்; வனத்துறையினர் அறிவுரை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பலாப்பழங்களை விற்க வேண்டாம் என வனத்துறையினர் வியாபாரிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையோரங்களில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் பல நூறு பலா மரங்கள் உள்ளன. பலாப்பழ சீசன் காரணமாக பழங்கள் மரத்தில் காய்த்து உள்ளன. பழத்தின் வாசனை காரணமாக பலா மரங்களை தேடி காட்டு யானைகள் வருகின்றன.பகல் நேரங்களில் கூட யானைகள் நடமாடுவதால், இச்சாலைகள் வழியே பயணிப்போருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலையோர பலா மரங்களில் உள்ள பழங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் சாலையோரம் வியாபாரிகள் பலாப்பழங்களை விற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.மேலும், கல்லாறு பகுதியில் தனி குழு அமைத்து கண்காணிப்பு பணியை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.---