உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாதீர்!

மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாதீர்!

கோவை: ''கால்நடைகளுக்கு முன் கூட்டியே கோமாரி தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால், இந்த மழைக்கு நோய் தாக்க வாயப்பு இல்லை'' என, கால்நடைகள் பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் திருகுமரன் கூறினார்.தமிழகத்தில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து இருப்பதால், கால்நடைகள் வளர்ப்பவர்கள் மத்தியில், தங்கள் கால்நடைகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திருகுமரன் கூறியதாவது:கால்நடை வளர்ப்பவர்கள், மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்ன வென்றால், மின் கம்பத்தில், உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மற்றும் டிரான்ஸ் பார்மர் அருகில் ஆடு, மாடுகளை கட்டி வைக்கக் கூடாது என்பதுதான். பள்ளமான பகுதிகளில் கொட்டம் அமைத்தும், மாடுகளை கட்டி வைக்கக் கூடாது. கால்நடைகளை மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது. இடி, மின்னல் தாக்கும் அபாயம் அதிகம். மழைக்காலம் வரும் முன்பாகவே, கோமாரி தடுப்பூசி போட்டு விட்டதால் நோய் தாக்க வாய்ப்பு இல்லை. கடந்த மாதம் 2.65 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கன்றுகளுக்கு, கரு சிதைவு நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குடல் புழு நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. ஈரம், சகதி மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில், மாடுகளை கட்டி வைக்காமல், உலர்ந்த இடங்களில் கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ