வீதியில் குப்பை கொட்டாதீங்க! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
வால்பாறை; வால்பாறையில், திறந்தவெளியில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், திறந்தவெளியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. இது குறித்து, நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: 'துாய்மை இந்தியா' திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திட்டம் குறித்து வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வால்பாறை நகரில் பொதுமக்கள் சிலர் குப்பையை திறந்தவெளியில் வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், ஆற்றோரப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்களும் குப்பையை ஆற்றில் வீசுகின்றனர். துாய்மை பணியாளர்கள் வீடு தேடி சென்று குப்பையை தரம் பிரித்து வாங்கி செல்லும் நிலையில், குப்பையை திறந்த வெளியில் வீசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, கூறினார்.