வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
கோவை : கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, கலெக்டர் கிராந்திகுமார் இன்று வெளியிடுகிறார்.அதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, நாளை முதல் நவ., 28 வரை விண்ணப்பங்களை, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள நியமன அலுவலர்களிடம் வழங்கலாம்.கோவை மாவட்டத்திலுள்ள, பத்து சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 3,117 ஓட்டுச்சாவடி அமைந்த அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் வாக்காளர்களிடம் மனுக்களை பெற்றிட, அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு விடுமுறை தவிர்த்து, வேலை நாட்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்.வரும் ஜன.,1 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அதாவது, 2006 டிச.,31க்கு முன்னதாக பிறந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே, இந்த சிறப்பு சுருக்க திருத்த காலத்தில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று, மனு அளிக்க இயலாதவர்கள், www.voters.eci.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாகவோ, Voters helpline மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், விபரங்களை சமர்ப்பித்து செயலி மூலமாகவும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.