ரூ.49.98 கோடியில் கனவு இல்லம்; 1,428 பயனாளிகளுக்கு உத்தரவு
கோவை; கோவை மாவட்டத்தில், 1,428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடியில், ஊரக வளர்ச்சி முகமை மூலமாக, 'கனவு இல்லங்கள்' கட்டப்படுகின்றன.'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வீடு ஒதுக்கப்படுகிறது.ஊரகப் பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக வசிக்கும் வகையில், ஊரக வளர்ச்சி முகமை மூலமாக 'கனவு இல்லம்' கட்டிக் கொடுக்கப்படுகிறது. குடிசையில் வசிப்பவர்கள், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், இலவச வீட்டுமனை பட்டா இருந்தும் சொந்தமாக வீடு கட்ட இயலாமல், வறுமையில் வாடுவோருக்கு இத்திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்படுகிறது.ஒவ்வொரு வீடும், 360 சதுரடியில், 3.60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 1,428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடியில் வீடுகள் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.மதுக்கரை ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் வீட்டை, கலெக்டர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்து, பயனாளிகளிடம் விசாரித்தார்.