ஆபத்தான வளைவுகளில் வாகன ஓட்டுநர்கள் திணறல்
வால்பாறை; வால்பாறையில், பாலாஜி கோவில் செல்லும் ரோட்டில், ஆபத்தான வளைவுகளில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்துள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் இருந்து, எட்டு கி.மீ., தொலைவில் கருமலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பாலாஜி கோவிலில் பெருமாளை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், அக்காமலை ரோடு பிரியும் இடத்தில் இருந்து, பாலாஜி கோவில் செல்லும் வரையிலான ரோடு கரடு முரடாக உள்ளது.இதே போல், கோவிலுக்கு சென்று, மீண்டும் வாகனங்கள் வால்பாறைக்கு செல்லும் போது, மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால், வளைவில் வாகனங்கள் திரும்பும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கருமலை பாலாஜி கோவிலுக்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை சென்று வருகின்றனர். வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும், ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். அதே போல், மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க, நகராட்சி சார்பில் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்,' என்றனர்.