பள்ளி மாணவனை தாக்கிய போதை ஆசாமிக்கு வலை
சூலூர் : சூலூர் அருகே விசைத்தறி தொழிலாளர்களான தம்பதியின் 14 வயது மகன், விடுதியுடன் கூடிய அரசு உதவி பெறும் பள்ளியில், படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, காடாம்பாடி பகுதியில் மாணவன் பலத்த காயத்துடன் ரோட்டில் மயங்கி கிடந்துள்ளான். அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், சம்பவத்தன்று விடுதியில் இருந்து, பள்ளிக்கு செல்லாமல், வீட்டுக்கு வர, பைக்கில் வந்த நபர்களிடம் லிப்ட் கேட்டுள்ளான். இரு பைக்குகளில் வந்த நான்கு பேர், மாணவனை அழைத்துக்கொண்டு சோமனூர் வந்துள்ளனர். மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். மாணவனையும் குடிக்க கூறி தாக்கியுள்ளனர். அதன்பின் ஒரு நபர் மட்டும், மாணவனை பைக்கில் அழைத்துக்கொண்டு, காடாம்பாடியில், பயன்பாடில்லாத ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு மாணவனை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளான். மறுத்த மாணவனை கொடூரமாக தாக்கிவிட்டு, அந்நபர் தப்பி சென்றது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மாணவனை தாக்கிய போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.