உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடுமையான வறட்சி நீடிப்பதால் நீரா பானம்... உற்பத்தி பாதிப்பு!

கடுமையான வறட்சி நீடிப்பதால் நீரா பானம்... உற்பத்தி பாதிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி:கடுமையான வறட்சியால், தென்னை மரத்தில் இருந்து 'நீரா' பானம் உற்பத்தி, 75 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேங்காய், கொப்பரை, இளநீர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், தென்னை மரத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட 'நீரா' பானம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, தென்னை மரத்தில் இருந்து, 'நீரா' பானம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய கடந்த, அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்தது. 'ஐஸ் பாக்ஸ்' முறையில், மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும், நீரா பானத்தை கொண்டு தேன், சர்க்கரை போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பணியும் நடக்கிறது.

வரவேற்பு இருக்கு!

கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில், உழவர் சந்தை உள்பட, ஒன்பது இடங்களில், 'நீரா' பானம் விற்பனை செய்யப்படுகிறது.200 மில்லி நீரா, 30 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இயற்கை குணம் மாறாமல் உள்ள 'நீரா' மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில், பருவமழை பொய்த்தது, பாசனத்துக்கு போதிய நீர் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால், தென்னை மரங்கள் பாதித்துள்ளன. இதனால், 'நீரா' பானம் உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது.நீரா பானம், 120 மரங்களில் இருந்து, தினமும், 320 லிட்டர் வரை உற்பத்தி செய்யப்பட்டது. வறட்சி காரணமாக, 75 சதவீதம் உற்பத்தி குறைந்து, வெறும், 80 லிட்டர் மட்டுமே உற்பத்தியாகிறது.கடும் வெயிலின் தாக்கத்தால், 25 சதவீதம் நீரா பானம் கெட்டு போகிறது. இதனால், விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

தண்ணீர் இல்லை

விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:கடுமையான வறட்சியால், பெரும்பாலான கிணறுகள் நீரின்றி வறண்டுள்ளன. தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதால், 'நீரா' பானம் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், 120 மரங்களுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, மரத்தை காப்பாற்ற போராட வேண்டிய சூழல் உள்ளது.ஒரு டிராக்டரில் வாங்கிய நீர், 12 மரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால், 120 மரத்துக்கு, 10 டிராக்டர் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு டிராக்டர் தண்ணீர், 1,200 ரூபாய் வரை செலவாகிறது.மேலும், ஒரு லிட்டர் 'நீரா' பானம் உற்பத்தி செய்ய, 150 - 180 ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, தண்ணீர் விலைக்கு வாங்குவது, நீரா பானம் உற்பத்தி செலவை அதிகரித்துள்ளது.இதனால், விலை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நீரா பானம் பொள்ளாச்சியில், 175 ரூபாயும், கோவை உழவர் சந்தையில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது; 200 மில்லி, 35 ரூபாய்க்கும், கோவையில், 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

உற்பத்தி இருக்காது

இதே நிலை நீடித்தால், வரும், 30ம் தேதிக்கு பின் உற்பத்தியே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவு வெப்பத்தால், தொழிலே பாதிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததால் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.ஏற்கனவே, நான்கு நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தை, லாபம் இல்லையென்றாலும் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன.மீதம் உள்ள, 19 நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு பேரிடியாக விழுந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !