எழுத்தறிவு திட்ட தேர்வு; முதியோர்கள் ஆர்வம்
வால்பாறை; புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கற்போருக்கான தேர்வில், 212 பேர் தேர்வு எழுதினர்.வால்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 21 வார்டுகளை சேர்ந்த, 15 வயதுக்கும் மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று, அடிப்படை கல்வியறிவு அளிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் நடக்கிறது.இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் கற்போர் மையம் துவங்கபட்டு, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, வால்பாறையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது. திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் பார்வையிட்டார்.வால்பாறை நகர், வில்லோனி நெடுங்குன்று, கவர்க்கல், பாலகணாறு, சங்கரன்குடி உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.வால்பாறை தாலுகாவில் நடந்த வயது வந்தோர் கல்வியறிவு திட்ட தேர்வில், 215 பேர் கலந்து கொண்டனர். தேர்விற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.கல்வி அறிவு இல்லாத பழங்குடியினர், புத்தகங்களை படிக்க கற்றுக்கொண்டதால், ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். விடுபட்டவர்களும், கல்வி கற்க ஆர்வம் காட்டுவதாக, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.