முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த மூதாட்டிகள்
கோவை: கோவை முதியோர் இல்லத்தில், மூதாட்டிகள் புத்தாடைகள் உடுத்தி மத்தாப்பு கொளுத்தி, மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாநகராட்சி மற்றும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்படும் ஆதரவற்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மூதாட்டிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, சாலையோரங்கள், கோயில்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது இடங்களில், ஆதரவில்லாமல் வாழ்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு அடைக்கலம் அளித்து உணவு, உடை, தங்குமிடம் வழங்கி, கோவை மாநகராட்சியுடன் இணைந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியவர்களை பராமரித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதரவற்ற மூதாட்டிகள் புத்தாடை உடுத்தி ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, மத்தாப்பு கொளுத்தி, பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.