உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லஞ்சத்தை ஒழிக்க தேர்தல் சீர்திருத்தம் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் 

லஞ்சத்தை ஒழிக்க தேர்தல் சீர்திருத்தம் அவசியம்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் 

கோவை; ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகம் கோவை சார்பில், 8வது ஜி.எஸ்.டி., தினவிழா எஸ்.என்.ஆர்., அரங்கில் நேற்று நடந்தது.விழாவில், மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வரிச் சீர்திருத்தம், ஜி.எஸ்.டி., சீரமைப்பின் முக்கிய நோக்கமே, சரியான வரி செலுத்துனர்களைப் பாதுகாப்பது. ஜி.எஸ்.டி., அறிவியல் பூர்வமான வரிமுறை. வரி பரவலாக்கப்பட்டு, சுமை குறைக்கப்பட்டுள்ளது. 17 விதமான வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட உள்ளன.வரி சீர்திருத்தம், நிதித்துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் என மூன்று முக்கிய சீர்திருத்தங்கள் காலத்தின் தேவை. லஞ்சம், ஊழல் சமூகத்தின் புற்றுநோய். இதனை அகற்ற தேர்தல் சீர்திருத்தம் அவசியம். அடிக்கடி தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு பேராபத்து. அடிக்கடி தேர்தல் நடந்தால் எந்த அரசும் திடமான முடிவை எடுக்க முடியாது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். அப்போது, சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும். லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.பல்வேறு பிரிவுகளில் சிறந்த வரி செலுத்துநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) கோவை தலைவர் ராஜேஷ் குமார், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஜி.எஸ்.டி., கூடுதல் கமிஷனர்கள் ஸ்ரீ பாலாஜி, சன் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம் மகத்தானது; 130 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விஞ்ஞான முறையிலான வரி விதிப்பு முறை. இதிலும், சில குறைகள் இருக்கலாம்; அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஜி.எஸ்.டி., கவுன்சிலில் மாநில நிதி அமைச்சர்களும் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு இது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து குறைகளை தீர்க்க முடியும். மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போவது, தொழில் வளர்ச்சிக்கு உதவாது. மகாராஷ்டிரா அரசு மின் கட்டணத்தை குறைத்து முன்னுதாரணமாக உள்ளது. மின் கட்டணத்தை குறைக்காவிட்டாலும், உயர்த்தக்கூடாது,'' என்றார்.

ரூ.3,906 கோடி வரி வசூல்

ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் தினேஷ் பங்கர்கர் தலைமை வகித்து பேசியதாவது:இந்தியாவின் மறைமுக வரி கட்டமைப்பையும், தொழில் வர்த்தக நடைமுறையையும் ஜி.எஸ்.டி., அமலாக்கம் மாற்றி அமைத்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட 2017--18ம் நிதியாண்டில், கோவை ஆணையரகத்தின் வரி வசூல் 1,105 கோடியாக இருந்தது. இது, 2024--25ல் ரூ.3,906 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரையிலான வரிவசூலில் இதுவே அதிகம். வரி செலுத்துனர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ரூ.746 கோடி ஜி.எஸ்.டி., 'ரீபண்ட்', உரிய காலத்துக்குள் செய்யப்பட்டுள்ளது. சேவா சுவிதா கேந்த்ரா வாயிலாக, வரி செலுத்துனர்களின் குறைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை