தொடும் உயரத்தில் மின்கம்பி; மக்களின் உயிருக்கு ஆபத்து
மேட்டுப்பாளையம்; சிறுமுகை சாஸ்திரி வீதியில் மின் கம்பி, மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சி றுமுகை பேரூராட்சி மூன்றாவது வார்டு பாரதி நகரில் சாஸ்திரி வீதி உள்ளது. இந்த வீதி வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கம்பிகள், உயர் அழுத்த மின் கம்பிகள் என, இரண்டு தனித்தனி மின் கம்பிகள் செல்கின்றன. இதில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும், மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளன. இதுகுறித்து சாஸ்திரி வீதி மக்கள் கூறியதாவது: மழை காலத்தில் காற்று அடிக்கும் போதும், இக்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, தீப்பொறி பறக்கிறது. இதனால் டிரான்ஸ்பாரத்தில் பியூஸ் போவதால், வீடுகளுக்கு வரும் மின்சாரம் அடிக்கடி தடை படுகிறது. தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ள மின் கம்பிகளை உயர்வாக இழுத்துக் கட்டும்படி, மின்வாரிய அதிகாரிகளிடம், பலமுறை கூறினோம். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை. பலத்த காற்று வீசும் போது, மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தால் மின்கம்பியை மிதிக்கும் மக்களுக்கு,ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.