காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை; போராட்டத்திற்கு பின் கரையை கடந்தது
வால்பாறை; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியர், சாலக்குடி ரோட்டில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றனர்.வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ரோட்டில், பகல் நேரத்தில் யானைகள் அதிக அளவில் ரோட்டை கடக்கின்றன.இந்நிலையில், அதிரப்பள்ளியில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றை கடக்க வந்த ஒற்றை யானை, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது.பத்து நிமிட போராட்டத்திற்கு பின், யானை ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், ''கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இங்குள்ள நீர்வீழ்ச்சி, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் அவ்வப்போது ஆற்றை கடப்பது வழக்கம். அது போன்று ஆண் யானை ஒன்று வெள்ளத்தில் சிக்கி மீள முடியாமல் தவித்தது. நீண்ட நேரத்திற்குப்பின், தாமாக வனப்பகுதிக்குள் சென்றது' என்றனர்.