வீடுகளை சேதப்படுத்திய யானைகளால் பரபரப்பு
வால்பாறை: வால்பாறை அருகே, வீடுகளை சேதப்படுத்திய யானைகள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் வழி மறித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, பன்னிமேடு, செலாளிப்பாறை, இஞ்சிப்பாறை, உருளிக்கல், கெஜமுடி, தாய்முடி, உமையாண்டி முடக்கு உள்ளிட்ட எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட்டில் முகாமிட்ட யானைகள், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியின் முன்பக்க சுவற்றை இடித்து சேதப்படுத்தின. அப்போது, இரண்டு வீடுகளிலும் யாரும் இல்லாததால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. அதன்பின், குடியிருப்பு பகுதியில் இருந்த கொய்யா மரத்தில் காய்களை பறிந்து உட்கொண்ட யானைகள், சாலையை கடந்து எதிரே வந்த அரசு பஸ்சையும் வழி மறித்தது. டிரைவர் பஸ்சை பின் நோக்கி நகர்த்தியதால் யானைகள் சிறிது நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றன. ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டு வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருவதால், தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.