காட்சிமுனையில் யானைகள்; சுற்றுலா பயணியருக்கு தடை
வால்பாறை; நல்லமுடி காட்சிமுனைப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக மாறியதால், யானைகள் வருகை அதிகரித்துள்ளது. பழைய வால்பாறை, வில்லோனி, பச்சமலை, நல்லமுடி காட்சி முனை, முத்துமுடி, சின்கோனா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் அங்கு தேயிலை பறிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி காட்சி முனைப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று காலை முதல் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் இங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சி முனைப்பகுதிக்கு செல்கின்றனர். சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு, சனி, ஞாயிறு மட்டும் சுற்றுலா பயணியர் செல்லலாம். நல்லமுடி பூஞ்சோலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.