உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி போனஸ் கோரி பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் கோரி பணியாளர்கள் போராட்டம்

வால்பாறை: தீபாவளி போனஸ் வழங்க கோரி, நகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கார் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்சங்க நிர்வாகிகள் தலைமையில், தீபாவளி போனஸ் வழங்க கோரி, நேற்று காலை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், தற்காலிக துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில் கடந்த, ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறோம். சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரரர், இந்த ஆண்டு தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, நகராட்சி கமிஷனர் ரகுராம், தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர், துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க முடியாது. இருப்பினும், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.இதனையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு பின் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !