ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து தரைமட்டம்; ரூ.8 கோடி மதிப்புள்ள ரிசர்வ் சைட் மீட்பு
கோவை; நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஏழாவது வார்டு ஜி.டி.நாயுடு லே-அவுட்டில் ஆக்கிரமிப்பில் இருந்து 'ரிசர்வ் சைட்' நேற்று மீட்கப்பட்டு, அங்கிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் ஏழாவது வார்டில், நகர ஊரமைப்பு துறையில் அனுமதி பெறப்பட்டு, 1983ல், 3.22 ஏக்கருக்கு லே-அவுட் உருவாக்கப்பட்டது. 2011ல் ஜி.டி.நாயுடு லே-அவுட் என பெயரிடப்பட்டது. மொத்தம், 31 மனைகள் உள்ளன. பொது ஒதுக்கீடாக, குழந்தைகள் விளையாடுவதற்கு, 25 சென்ட், கடைக்காக, 4 சென்ட் ஒதுக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஒதுக்கிய இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு விற்கப்பட்டு, ஐந்தாவது நபருக்கு, 2023 ஆக., மாதம், ஒரு கோடியே, 17 லட்சம் ரூபாய்க்கு காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் (பத்திரம் எண்: 8234/ 2023) செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக ஏப்., மாதம் தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால், மாநகாட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி செய்ததும், ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். அங்கு, 20 சென்ட் இடத்தில், 8,000 சதுரடிக்கு 'ஒர்க் ஷாப்', இன்னொரு இடத்தில் ஷெட் அமைக்கப்பட்டு இருந்தது. அவ்விடத்தை மீட்டு மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகி விடும் என்பதால், கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. கிழக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் குமார் தலைமையிலான அலுவலர்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்களை நேற்று பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பாளர் பெயரில் இருந்த சொத்து வரி, குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்பட்டது. பட்டாவும் ரத்து செய்யப்பட்டு, மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு எட்டு கோடி ரூபாய் இருக்குமென மதிப்பிடப்பட்டு உள்ளது.