விவசாயியிடம் ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த இன்ஜினியர் கைது
கோவை:தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கதிர்மணி, 36. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43. பி.இ., பட்டதாரியான இவர், மென்பொருள் பயிற்சி அளிக்கும் வேலை பார்த்தார்.இந்நிலையில் கதிர் மணிக்கு, மணிகண்டனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது, 'பாரக்ஸ்' டிரேடிங் செய்ய கற்றுத்தருமாறு கதிர் கேட்டுள்ளார். 'இன்ட்ரா டே டிரேடிங்' எனப்படும் தினசரி பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், அதிக லாபம் தருவதாக தெரிவித்தார்.பல்வேறு தவணைகளில் பல லட்சம் ரூபாய்களை கதிர் மணி கொடுத்துள்ளார். பின், தான் புதிதாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்போவதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால், லாபத்தில் 50 சதவீதம் தருவதாகவும் கூறினார்.இதை நம்பிய கதிர் மணி, முதற்கட்டமாக, 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். முதலீடு செய்வதற்காக மீண்டும் 20 லட்சம் ரூபாயை, மணிகண்டனிடம் கொடுத்தார். நிறுவனம் துவங்க, முதலீடு என பல தவணைகளில், 51 லட்சம் ரூபாய் வரை கதிர்மணி கொடுத்துள்ளார். ஆனால், மணிகண்டன் முதலீட்டிற்கான லாபம் மற்றும் அசல் பணத்தை திருப்பி கொடுக்காமல், காலம் கடத்தி வந்தார்.ஆனால், வேறு ஒரு இடத்தில் வேறு பெயரில் நிறுவனத்தை துவங்கி, கதிர்மணிக்கு தெரியாமல் நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம், கோவை வந்த கதிர்மணி, மணிகண்டனின் அலுவலகம் இருக்கும் இடத்திற்கு சென்று கேட்டதற்கு, பணம் தர மறுத்தார். இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் ஆத்திரத்தில், கதிர் மணியை தாக்கியதாக கூறப்படுகிறது.வடவள்ளி போலீசில் கதிர்மணி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.