ஆரோக்கியத்துக்கு சுற்றுப்புற சுகாதாரம் அவசியம்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
வால்பாறை : ஆரோக்கியமாக வாழ, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும், என, துாய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பேசினார்.வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து நகராட்சி கமிஷனர் விநாயகம் பேசியதாவது:பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், கடந்த, 2014ம் ஆண்டு 'துாய்மை இந்தியா திட்டம்' துவங்கப்பட்டது. 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.இந்தியாவின் மனித வளத்தை கண்டு, வளர்ந்த நாடுகள் பயப்படுகின்றன. உலக அரங்கில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறது. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வால்பாறை நகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாம் ஆரோக்கியமாக வாழ, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். நோயின்றி வாழ வேண்டுமானால், குப்பையை தரம் பிரித்துக்கொடுக்க வேண்டும்.வால்பாறை நகராட்சியில், 217 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. நகராட்சியில், 44 துாய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், நகரை சுகாதாரமாக பராமரிக்க மாணவர்கள் ஒத்துழைப்பு தேவை. பெற்றோர்களிடம் கூறி, வீட்டில் மூன்று குப்பைத்தொட்டிகளை வைத்து, தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறுங்கள். மாற்றம் மாணவர்களிடம் இருந்து துவங்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து 'துாய்மை சேவை' குறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர் காமாட்சி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.