ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் பழுது
கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 95 ரயில்கள் செல்கின்றன. 60 ஆயிரம் பயணிகள் ரயில்வே ஸ்டேஷனை பயன் படுத்துகின்றனர். ஆறு நடைமேடைகள் உள்ளன. இவற்றுக்குச் செல்ல பிரதான நுழைவாயில் மற்றும் கூட்ஸ் ஷெட் ரோடு நுழைவாயில்கள் உள்ளன. பிரதான நுழைவாயிலில் இருந்து நடைமேடை, 1 'ஏ'க்கு செல்ல நுழைவாயில் முன்பகுதியில் எஸ்கலேட்டர் உள்ளது. மற்ற நடைமேடைகளுக்கு செல்வதற்கான எஸ்கலேட்டர்கள், ஸ்டேஷன் உட்பகுதியில் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகளுக்கு, செல்வதற்கான எஸ்கலேட்டர் சில தினங்களுக்கு முன் பழு தடைந்தது. இன்னும் சரி செய்யாததால், சுமையுடன் வரும் பயணிகள் அவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். முதியவர்கள், படிக்கட்டுகள் வழியாக நடைமேடைக்குச் செல்ல சிரமப் படுகின்றனர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எஸ்கலேட்டர் சரிசெய்யும் பணி விரைவில் துவங்கும். பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. முதியவர்கள் அதை பயன்படுத்தலாம்' என்றார்.