பாறை மீது ஓய்வெடுக்கும் சிறுத்தை :பதறும் எஸ்டேட் தொழிலாளர்கள்
வால்பாறை: பாறை மீது ஓய்வெடுக்கும் சிறுத்தையால், வேவர்லி டீ எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ள வேவர்லி எஸ்டேட்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, ஐந்து வயது சிறுவன் வன விலங்கு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில், இந்த எஸ்டேட் பகுதியில் தற்போது மீண்டும் சிறுத்தை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் பகல் நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பவும் அச்சப்படுகின்றனர். தொழிலாளர்கள் கூறியதாவது: வனவிலங்கு தாக்கி சிறுவன் இறந்துள்ள நிலையில், இன்று வரை சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூண்டு கூட வைக்காமல் கண் துடைப்புக்காக கேமரா மட்டும் பொருத்தினர். ஆனால் இது வரை எந்த வன விலங்குகளைஎயும் பிடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை எஸ்டேட் பகுதியில் உலா வரத்துவங்கியுள்ளது. பகல் நேரத்தில் பாறை மீது ஹாயாக ஓய்வெடுக்கும் சிறுத்தை, மாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு விசிட் அடிக்கிறது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளதால், வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் போது, தனியாக செல்லாமல் கூட்டமாக செல்வது, பாதுகாப்பாக இருக்கும். சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என்றனர்.