வாரம் இருமுறை ரேஷன் கடை திறக்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
வால்பாறை; எஸ்டேட் பகுதியில், வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் ரேஷன் கடை திறக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 16,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. 47 ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.எஸ்டேட் பகுதிக்குள் நுழையும் யானைகள் ரேஷன்கடையை தாக்குகின்றன. இதனால் ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பீலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக வழங்கப்படுவதில்லை.யானைகள் நடமாடும் பகுதியில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில், தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும், கூடுதலாக சனிக்கிழமைகளிலும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். வாரத்தில் இரு நாட்கள் வீதம் மாதத்தில், 8 நாட்கள் ரேஷன் கடை திறந்தால் உரிய ரேஷன் பொருட்களை அனைவரும் பெற முடியும்,' என்றனர்.சிவில் சப்ளை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் எஸ்டேட்களில், 'கண்டெய்னர்' ரேஷன் கடைகள் அமைக்கும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக, ஆறு எஸ்டேட்களில் 'கண்டெய்னர்' கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.''பிற எஸ்டேட் பகுதியில் கண்டெய்னர் கடைகள் விரைவில் அமைக்கப்படும். அதன்பின், எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் வகையில், ரேஷன் கடைகள் வாரம் இரு நாள் கட்டாயம் திறக்கப்படும்,'' என்றார்.