முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து
பொள்ளாச்சி; பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம், பொள்ளாச்சி நீர்வளத்துறை அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள்மத்திய அமைச்சர் சுப்ரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் மகாலிங்கம் மற்றும் பழனிச்சாமி சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபமும் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், 1.25 ஏக்கர் பரப்பளவில், நான்கு கோடியே, 28 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் இவற்றை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். நேற்று, டி.ஐ.ஜி., சசிமோகன், ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். வரும், 23ம் தேதி முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், முதல்வர் உடல்நலம் காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.