மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தடயங்கள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
கோவை,நவ.14- மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், கைப்பற்றப்பட்ட தடயங்கள் சென்னை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை, பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவு, கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சதீஸ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, ஆகியோர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. துடியலுார் பகுதியில் பதுங்கிய மூவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில், குணா 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு சில நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மற்ற இருவரும் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, 'போலீஸ் கஸ்டடி' எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை, அடையாளம் காட்டும் வகையில், கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, சி.ஜே.எம்., கோர்ட்டில், போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதற்கு மாஜிஸ்திரேட் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையில், சம்பவ இடத்தில், கைப்பற்றப்பட்ட பொருட்கள், துணிகள், மற்றும் கைரேகை பதிவுகள், ரத்த மாதிரி உள்ளிட்ட தடயங்கள், கூடுதல் மகளிர் கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். இவற்றை ஆய்வுக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து தடயங்களும், சென்னை தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.