உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்ப்பு

விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்பார்ப்பு

மா நகராட்சி மேற்கு மண்டலம், 43வது வார்டில் வெங்கிட்டாபுரம், ஜவஹர்புரம், சிம்சன் நகர், சாய்பாபா காலனி கணபதி லே-அவுட், மணியம் காளியப்பா வீதி, எஸ்.கே.வி.நகர், கே.கே.புதுார் சுப்பையா வீதி உள்ளிட்ட பகுதிகளில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், 21 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில், 80 சதவீத மக்கள் தினக்கூலிக்கு செல்கின்றனர். குறுகிய வீதிகள் அதிகம் கொண்ட இப்பகுதியில், லே-அவுட் வீடுகள், 300க்கும் குறைவாகவே உள்ளன. தடாகம் ரோட்டை ஒட்டிய இப்பகுதிகளில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இச்சூழலில், வெங்கிட்டாபுரம் சிக்னல் அடுத்து, தனியார் பள்ளி எதிரே அண்ணா வீதி செல்லும் வழியில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதுடன், அதனையொட்டியுள்ள ஓ.எஸ்.ஆர். இடத்தை மாநகராட்சி மீட்டு, 'யு டர்ன்' போன்ற அம்சங்களை ஏ ற்படுத்தினால், போக்குவரத்து பிரச்னை ஓரளவு குறையும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். விளையாட்டு மைதானம் புவனேஸ்வரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான, 69 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. குப்பை, புதர்களால் சூழப்பட்டுள்ளது. இங்கு பயனற்று கிடக்கும் கழிப்பறைகளில், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பயனற்ற கட்டடங்களை அகற்றி விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கலாம். கபடி, வாலிபால் விளையாடுபவர்கள் இங்கு அதிகம். மைதானம் இல்லாததால் வெளியூர் சென்று பயிற்சி எடுக்கிறோம்.மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும். - அருண் கபடி வீரர்பல ஆண்டு போராட்டம் 50 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி இட்டேரிபுறம்போக்காக இருந்தது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், குடியிருப்புகள் கட்டி வசித்துவருகிறோம். பட்டா கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு பட்டா வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இங்குள்ள மின் கம்பங்கள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. விபத்து ஏற்படும் முன், மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜலட்சுமி மகளிர் குழு தலைவிதண்ணீர் பிரச்னை புவனேஸ்வரி நகர், அம்மன் கோவில் வீதியில் உள்ள, ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எங்கள் பகுதிகளுக்கு, உப்பு தண்ணீர் வருகிறது. அவ்வப்போது வினியோகத்தை நிறுத்திவிடுகின்றனர். முன்பு காலை, மாலை நேரங்களில் உப்பு தண்ணீர் வந்தது. தற்போது காலை மட்டும் இரண்டு மணி நேரம் வருகிறது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஏற்கனவே இங்கிருக்கும் ஆழ்குழாய் கிணறு மோட்டாரை, சரி செய்தால் தண்ணீர் பிரச்னை இருக்காது. -அரவிந்த் டிரைவர்சாக்கடை பிரச்னை வார்டு முழுவதும் சாக்கடை அடைப்பு பிரச்னை பிரதானமாக உள்ளது. இதனால், துர்நாற்றம், கொசு தொல்லை பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். உப்பு தண்ணீர் குழாய்கள் உடைந்துள்ளன. ஆர்.கே.என். லே-அவுட்டில் இருக்கும் பூங்காவும், பராமரிப்பின்றி காணப்படுகிறது. வெங்கிடசாமி வீதியில் எம்.ஜி.ஆர்.காலத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில், சுகாதார அலுவலகம் செயல்படுகிறது. அக்கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. -சுந்தராம்மாள் இல்லத்தரசி.

செய்த பணிகளும் செய்யாத பணிகளும்

வார்டு கவுன்சிலர் மல்லிகா (இ.கம்யூ.) கூறியதாவது: n மருத்துவ தேவைகளுக்காக மக்கள் தடாகம் ரோடு, வெங்கிட்டாபுரம் அருகே, 1.5 கி.மீ., தொலைவில் குப்பக்கோனாம்புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சென்று வந்தனர். நான் கவுன்சிலரானதும், வெங்கிட்டாபுரம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம், துணை நலவாழ்வு மையம் என இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டன. n கமலநாதன் நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.1.3 கோடியில் மெய்நிகர் ஆய்வகம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் இன்னும் மேம்படும். n முன்பு ரோடு படுமோசமாக இருந்தது. தற்போது, வார்டில் ரூ.1.33 கோடியில், 90 சதவீதம் தார் ரோடு பணிகள் முடிந்துவிட்டன. ரூ.49 லட்சத்தில் கான்கிரீட் ரோடு பணிகளும், 90 சதவீதம் முடிந்துவிட்டன. பாக்கி பணிகள் விரைவில் துவக்கப்படும். n அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் இருந்து, வெங்கிடாபுரம் வரை மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. தடாகம் ரோட்டை ஒட்டி கிழக்கே செல்லும் அண்ணா வீதி நுழைவில், ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அருகே ஆறு சென்ட் ஓ.எஸ்.ஆர்., எனும், திறந்தவெளி பொது பயன்பாட்டு இடம் விஷயத்தில், மாநகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யுமாறு தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். இடத்தை மீட்டு, ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் ரோட்டை ஒட்டி, 'யு டர்ன்' அமைக்கலாம்; ரோடு விரிவடையும். n புவனேஸ்வரி நகர், அம்மன் கோவில் வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக, 69 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளேன். கமிஷனரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். n அம்மன் கோவில் வீதி, சுப்பிரமணிய புரம் உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கழிவுகளை எடுக்க துாய்மை பணியாளர்கள் போதுமானதாக இல்லை. வார்டுக்கே நிரந்தர துாய்மை பணியாளர் ஏழு பேர்தான் உள்ளனர். 150 வீதிகள் இருக்கும் வார்டில் குறைந்தது, 10 பேர் தேவை. n வெங்கிடசாமி நகரில் செயல்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு மாற்றாக, அதே பகுதியில் ரூ.17.80 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படவுள்ளது. n சுகாதார நிலையம் செயல்படும் இடத்தில், புதிய கட்டடம் கட்டவும் கருத்துரு அனுப்பியுள்ளோம். வார்டில் இருக்கும் மற்ற குறைகளை, சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ