விவசாய அடையாள எண் பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு
கிணத்துக்கடவு; விவசாய அடையாள எண் பெற, வரும் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். அரசு திட்டங்களைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு முறையும் தங்கள் நில உடமைக்கான சான்று பெற வேண்டியுள்ளது. இதனால் நேர விரையம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்து தனியாக அடையாள எண் வழங்கப்படும் என அறிவித்தது. தமிழகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்தனர். இதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் முடியும் என அரசு அறிவுறுத்தியது.தற்போது, ஏப்., 15ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, நில ஆவணங்களை பதிவு செய்யாத விவசாயிகள், அருகிலுள்ள பொது சேவை மையம், வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், நில உடமைகள், ஆதார், மொபைல்போன் எண் போன்ற விபரங்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும்.இத்தகவலை, கிணத்துக்கடவு, வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.