ஆன்லைனில் வந்தது போலி வாட்ச்; வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; ஆன்லைன் வாயிலாக செய்த ஆர்டரில், போலி நிறுவன வாட்ச் வந்தது. வாடிக்கையாளர் வழக்கு தாக்கல் செய்ததன் அடிப்படையில், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஒண்டிப்புதுார், கஸ்துாரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ தேவி; 2023, மே 25ல், அமேசான் ஆன்லைன் விற்பனை நிறுவனம் வாயிலாக, 'ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்' ஆர்டர் செய்தார். இதற்காக, 76,999 ரூபாய் செலுத்தினார். நான்கு நாட்கள் கழித்து, அவருக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' டெலிவரி செய்யப்பட்டது. பார்சலை திறந்து பார்த்த போது, ஸ்ரீ தேவி ஆர்டர் கொடுத்த வாட்ச் இல்லை. வாட்ச்சில் 'அல்ட்ரா 8' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம், அல்ட்ரா 8 என்ற வாட்ச்சை இதுவரை அறிமுகம் செய்யவில்லை. பார்சலில் வந்த வாட்ச் போலி என்பது தெரியவந்தது. இதனால், பார்சலை திருப்பி அனுப்பிய அவர், பணத்தை தரக் கோரி அமேசான் நிறுவனத்துக்கு மெயில் அனுப்பினார். ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்து வந்தனர். இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஸ்ரீதேவி வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு, 76,999 ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் ' என்று தெரிவித்துள்ளனர்.