புறவழிச்சாலையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை
கோவை; நீலாம்பூர் - மதுக்கரை புறவழிச்சாலையில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் இருந்து கோவை வழியாக, கேரளா செல்லும் கொச்சின் சாலை, நீலாம்பூர் அருகே கடக்கிறது. நீலாம்பூரில் இருந்து பாலக்காடு ரோட்டில் மதுக்கரை வரை, 28 கி.மீ., துாரத்துக்கு, பி.ஓ.டி., என்கிற திட்டத்தில், தனியார் நிறுவனத்தால் புறவழிச்சாலை உருவாக்கப்பட்டது. சமீபகாலமாக இந்த ரோட்டில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, 4 வழிச்சாலை மற்றும் இரு புறமும் சர்வீஸ் சாலைகள் அமைத்து தரம் உயர்த்தும் பணிக்காக, இந்த சாலையானது, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை இந்த ரோட்டை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாலையில் உள்ள ஆறு சுங்கசாவடிகளில் ஐந்தை மூடிவிட்டு மதுக்கரையிலுள்ள ஒரே ஒரு சுங்க சாவடியில் மட்டும், ஆக., 1 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தங்களுக்கு அதிக செலவு பிடிப்பதாக, தனியார் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை விதிகளுக்கு உட்பட்டே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், உள்ளூர் வாகனங்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை பயன்படுத்த, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'நெடுஞ்சாலை துறை விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனத் தெரிவிக்கவில்லை. கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். சுங்கச்சாவடி உள்ள பகுதியில் இருந்து 20 கி.மீ., சுற்றளவு பகுதியில் உள்ளவர்கள், அவர்களது ஆதார் கார்டை மூலம் ரூ.350 ல் மாத பாஸ் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு வசதி உள்ளது. இதை செய்தால் சிக்கல் இருக்காது' என்றார்.