உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தார் சாலையாக மாற்றித் தாங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 தார் சாலையாக மாற்றித் தாங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கோவை: நஞ்சுண்டாபுரத்தில் இருந்து கந்தன் பிள்ளையார் கோயில் வரை, மாநகராட்சிக்கு சொந்தமான மண் சாலையை, நமக்கு நாமே திட்டத்தில் தார் சாலையாக மாற்றித்தர, உப்பிலிபாளையம் கிராம விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் வாகன ஓட்டிகள், நஞ்சுண்டாபுரம் வழியாக வந்து ரயில்வே பாலத்துக்கு கீழே உள்ள கரடுமுரடான பாதையில் பயணிக்கின்றனர். இதில் செல்ல விரும்பாவிட்டால், போத்தனுார் வழியாக செல்ல வேண்டும். இது, சுற்றுப்பாதை; பல கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. நஞ்சுண்டாபுரத்தில் ஈஷா மயானத்துக்கு அருகில் ஒரு வழித்தடம் உள்ளது. 60 அடி அகலத்துக்கு திட்ட சாலை அமைப்பதற்கு உள்ளூர் திட்ட குழுமத்தில் திட்ட வரைவு இருக்கிறது. தேவையான இடங்களில் நிலம் கையகப்படுத்தி சாலை அமைத்தால் வெள்ளலுார் செல்ல இணைப்பு சாலை கிடைக்கும். இதில், கன்னிமார் கோயில் பகுதியில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான இணைப்பு இட்டேரி சாலை, கந்தன் பிள்ளையார் கோயில் வரை செல்கிறது. இப்பாதையை 100 ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். விளைபொருட்களை சந்தைக்குச் செல்தல், பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்வதற்கும் பயன்படுகிறது. இட்டேரி மண் சாலை குழியாகவும், சகதியுமாகவும் இருப்பதால் விவசாய இடுபொருட்கள், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல் லவும், மாணவர்கள் செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. நமக்கு நாமே திட்டத்தில் இச்சாலையை தார் சாலையாக அமைத்துத் தர வேண்டுமென உப்பிலிபாளையம் கிராம விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் மனு கொடுத்துள்ளார். விவசாயிகள் கூறுகையில், 'முதல்கட்டமாக, கந்தன் பிள்ளையார் கோயில் வரை தார் சாலை அமைத்துக் கொடுத்தால் போதும். 1.2 கி.மீ. துாரம் இருக்கிறது. அப்பகுதி விவசாயி ஒருவர், 456 மீட்டர் அவரது செலவில் அமைத்திருக்கிறார். மீதமுள்ள பகுதியில் தார் சாலை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நிதி கொடுக்க, விவசாயிகள் தயாராக உள்ளனர். மாநகராட்சியும் பங்களிப்பு செலுத்தி, அப்பகுதியில் ரோடு போட்டுத் தர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை